ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல்காரர் கன்ஹையா லால் கடந்த ஜூன் 28ஆம் தேதி, தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காகவே கன்ஹையா லால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய கெளஸ் முகமது மற்றும் முகமது ரியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநில காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணை நடத்தியது.
இந்நிலையில், கைதான இருவரின் செல்ஃபோன் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களின் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கெளஸ் முகமது, முகமது ரியாசைப் போலவே, சுமார் 40 பேருக்கு கொலை செய்வதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறப்பு புலனாய்வு குழு தகவலின்படி, அந்த 40 பேரும் ராஜஸ்தானின் 6 மாவட்டங்களை சேர்ந்தவர்கள், அந்தந்த மாவட்டங்களில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்டவர்களை தலை துண்டித்து கொலை செய்து, அதை வீடியோவாக பதிவு செய்ய அவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.