உதய்பூர் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வசித்து வருபவர், இக்பால் சக்கா. இவர் தங்கத்தை மிக நுண்ணிய வடிவத்தில் பயன்படுத்தி பல்வேறு உலக சாதனைகளை படைத்து வருகிறார். இதுவரை இவர் செய்த தங்கத்தினாலான நுண்கலை பொருட்களின் சாதனைகள் கின்னஸ், லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், யுனிக் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், வேர்ல்ட் அமேசிங் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலகக்கோப்பையை தனது நுண்கலை நுட்பத்தால் உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளார். அதிலும் வெறும் 1 மில்லிமீட்டர் அளவுள்ள மிகச்சிறிய FIFA உலகக்கோப்பையும், 0.01 மில்லிமீட்டர் அளவுள்ள கால்பந்தையும் தயாரித்துள்ளார்.
1 மில்லிமீட்டரில் பிபா உலகக்கோப்பையை உருவாக்கி சாதனை படைத்த இக்பால் சக்கா இதுகுறித்து ஈடிவி பாரத் செய்திகளிடம் இக்பால் கூறுகையில், “எனக்கு சிறு வயதில் இருந்தே தங்க கைவினைத்திறனில் ஆர்வம் அதிகம். தற்போது செய்துள்ள உலகக்கோப்பையை லென்ஸ் மூலமாகவும், கால்பந்தை மைக்ரோலென்ஸ் மூலம் மட்டுமே பார்க்க முடியும்.
FIFA உலகக்கோப்பையில் இந்தியா பங்கேற்கவில்லை. ஆனால், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் FIFA மீதுதான் உள்ளது. அனைத்து இடத்திலும் இந்தியா ஜொலிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். மேலும் FIFA உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு, எனது கோப்பையையும் வழங்க வேண்டும் என்பது எனது ஆசை. இதற்காக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன்’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க:உலக கோப்பை: உருகுவேவை வீழ்த்திய போர்ச்சுக்கல்; அடுத்த சுற்றுக்கு தகுதி