பெங்களூரு: பெண் பயணி ஒருவரிடம் ஊபர் டாக்சி ஓட்டுநர் அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்து உள்ளது. பெண் பயணியிடம் டாக்சி ஓட்டுநர் தனது பிறப்புறுப்பினை காட்டியதாக பெண் பயணி குற்றம் சாட்டி உள்ளார். தனக்கு நேர்ந்த இந்த மோசமான நிகழ்வு குறித்து அப்பெண் பயணி அவரது லிங்க்டு இன் (LinkedIn) பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
பெங்களூரில் பிடிஎம் 2வது லெவலில் இருந்து ஜேபிநகர் மெட்ரோ ரயில் நிலையம் வரை கால் டாக்சியில் முன்பதிவு செய்த பெண்ணிடம் ஓட்டுநர் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து லிங்க்டுஇன் தளத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த பதிவு வைரலானதை அடுத்து, அந்த ஓட்டுநர் மீது ஊபர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறி அப்பெண் மற்றொரு பதிவையும் வெளியிட்டு உள்ளார்.
பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ஓட்டுநர் மீது ஊபர் நிறுவனம் நடவடிக்கை எடுத்து உள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து அப்பெண் போலீசில் புகார் அளிக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து அப்பெண் வெளியிட்டுள்ள பதிவில், “பயணிப்பதற்காக கால் டாக்சியை முன்பதிவு செய்திருந்தேன். சரியான நேரத்தில் என்னை அழைத்துச் செல்ல ஓட்டுநர் வந்தார். முதலில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது.
அப்போது திடீரென ஓட்டுநர் மோசமாக நடந்து கொள்ளத் தொடங்கினார். அவரது செயல்களால் அதிர்ச்சி அடைந்த நான், விரைவாக செல்ல வேண்டிய இடத்தில் இறக்கி விடும்படி கூறினேன். அதன்படி, ஓட்டுநரும் அந்த இடந்த்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்று விட்டார். பின்னர் நான் பயணத்திற்கான பணம் கொடுக்கச் சென்றபோது அந்த ஓட்டுநர் அவரது பிறப்புறுப்பை காட்டினார். அவரது செயலால் பயந்து போன நான், உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டேன்” என பதிவிட்டு உள்ளார்.