டெல்லி:ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய ஆளில்லா விமான (Drone) தாக்குதலில் எண்ணெய் டேங்கர்கள் வெடித்துச் சிதறியதில் இறந்த இந்தியர் இருவரின் உடல்களும் இன்று (ஜனவரி 21) தாயகம் கொண்டுவரப்படுகிறது.
அபுதாபியில் கடந்த திங்கள்கிழமை (ஜனவரி 17) அன்று ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ட்ரோன் தாக்குதலில் மூன்று எண்ணெய் டேங்கர்கள் வெடித்து இந்தியர்கள் இரண்டு பேர் உள்பட மூவர் உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்தனர், அதில் இருவர் இந்தியர்.
படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை முடிந்து திரும்பினர். விபத்துக்குள்ளான எண்ணெய் டேங்கர்கள் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமானவை. இது அபுதாபியின் முன்னணி எரிசக்தி உற்பத்தி நிறுவனமாகும்.
இறந்த இந்தியர்களின் உடல்களை முறைப்படி தாயகம் அனுப்புவதற்கான பணிகளை அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் வியாழக்கிழமை (ஜனவரி 20) நிறைவுசெய்தது. இதையடுத்து, இன்று பஞ்சாப் மாநில அமிர்தசரஸுக்கு வரும் உடல்கள் பின்னர் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டடச் செலவு கூடுதலாக ரூ.200 கோடி அதிகரிப்பு