தேவனஹள்ளி :தென் ஆப்பிரிக்காவில் இருந்து வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய புதிய வகை கரோனா தொற்று குறித்து உலகம் முழுவதும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்தடைந்த இரு பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுக்கு ஒமிக்ரான் இருக்கிறதா என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு ஒமிக்ரான் இல்லை என முடிவுகள் வந்தன.
இருப்பினும் அவர்களது மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெங்களூரு புறநகர் துணை ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து பெங்களூரு புறநகர் துணை ஆணையர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “நவம்பர் 1 முதல் நவம்பர் 27 வரை தென் ஆப்பிரிக்காவிலிருந்து பெங்களூருக்கு சுமார் 94 பயணிகள் வந்தனர். அவர்களில் இந்த இருவருக்கு மட்டுமே கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் நவம்பர் 11ஆம் தேதியும், மற்றொருவர் 20 ஆம் தேதியும் பெங்களூரு வந்துள்ளனர். இதில் தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் பொம்மனஹள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், மற்றொரு நபர் ஒரு தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
புதிய வகையான ஒமிக்ரான் தொற்று பரவுதால், கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லையில் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி தொடக்கம்