இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. தினந்தோறும் 4 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. கரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மியூகோர்மைகோசிஸ்
இதற்கிடையில், தற்போது பல்வேறு மாநிலங்களில் ’கறுப்பு பூஞ்சை நோய்’ பரவத் தொடங்கியுள்ளது. ’மியூகோர்மைகோஸிஸ்’ என்ற இந்த நோய், குறிப்பாக கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுவந்த நபர்களை குறி வைக்கிறது.
இந்த நோயில் பாதிக்கப்படுவர்கள், பலரின் உடல் பாகங்களை அகற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இந்த கறுப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக, ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புயல் ஓய்வதற்குள், அடுத்ததாக 'வெள்ளை பூஞ்சை' ஆட்டம் இந்தியாவில் தொடங்கியுள்ளது. ஹரியானாவில் ஹிசார் சிவில் மருத்துவமனையில் இரண்டு கரோனா நோயாளிகளுக்கு வெள்ளை பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதே போல, பாட்னாவில் 4 பேருக்கு இந்தப் வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது.