ஐதராபாத் :நாட்டில் உள்ள எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு 54 ஆயிரத்து 545 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டு உள்ளதாகவும், இது நாகாலாந்து, மிசோரம், சிக்கிம் ஆகிய மூன்று மாநிலங்களின் நடப்பு நிதி ஆண்டின் பட்ஜெட்டை காட்டிலும் மிகப் பெரியது என கணிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்கள் தொடர்பான அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தேசிய தேர்தல் வாட்ச் ஆகிய அமைப்புகள் வெளியிட்டு உள்ளன.
அந்த அறிக்கையில் 28 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 4 ஆயிரத்து 1 எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு 54 ஆயிரத்து 545 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் நடப்பு நிதி ஆண்டில் நாகாலாந்து, மிசோரம், சிக்கிம் ஆகிய மூன்று மாநிலங்களின் ஒட்டுமொத்த பட்ஜெட் தொகை 49 ஆயிரத்து 103 கோடி ரூபாய் என்றும் 3 மாநிலங்களின் பட்ஜெட் தொகையை காட்டிலும் எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2023 - 24 நிதி ஆண்டுக்கான நாகாலாந்து மாநிலத்தின் பட்ஜெட் 23 ஆயிரத்து 086 கோடி ரூபாய், அதேநேரம் மிசோரம் மாநிலத்திற்கு 14 ஆயிரத்து 210 கோடி ரூபாய் என்றும் சிக்கிமிற்கு 11 ஆயிரத்து 807 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த மூன்று மாநிலங்களின் ஆண்டு பட்ஜெட்டையும் சேர்த்து 49 ஆயிரத்து 103 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டு உள்ள நிலையில், நாட்டில் உள்ள 4 ஆயிரத்து 1 எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு 54 ஆயிரத்து 545 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
28 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள ஒட்டுமொத்தமாக உள்ள 4 ஆயிரத்து 33 எம்.எல்.ஏக்களின், 4 ஆயிரத்து 1 சிட்டிங் எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டதாகவும், அதன் படி சராசரியாக ஒரு எம்.எல்.ஏவின் சொத்து மதிப்பு 13 கோடியே 63 லட்சமாகன் கணக்கிடப்பட்டு உள்ளது.
கட்சி வாரியாக எம்.எல்.ஏக்களின் சராசரி :
கட்சி வாரியாக கணக்கிடுகையில், பாஜகவில் உள்ள ஆயிரத்து 356 எம்.எல்.ஏக்களில் சராசரியாக ஒருவரின் சொத்து மதிப்பு 11 கோடியே 97 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 719 எம்.எல்.ஏக்களில் சராசரியாக ஒரு எம்.எல்.ஏவின் சொத்து மதிப்பு 21 கோடியே 97 லட்ச ரூபாய் என்றும், ஆம் ஆத்மி கட்சியில் 161 எம்.எல்.ஏக்களில் சராசரி சொத்து மதிப்பு 10 கோடியே 20 லட்ச ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்தபடியாக ஆந்திர பிரதேசத்தை ஆளும் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் 146 எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு 23 கோடியே 14 லட்ச ரூபாய் என கூறப்பட்டு உள்ளது.