ஹைதராபாத்:உருமாறிய கரோனா தொற்று வகையான ஒமைக்ரான், கடந்த நவம்பர் 24ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர் பல நாடுகளில் தொற்று பரவியதை அடுத்து, சர்வேதச அளவில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
இருப்பினும், ஒமைக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. டிசம்பர் 9ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 63 நாடுகளில் ஒமைக்ரான் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் ஒமைக்ரான் பரவல்
அதேபோல், இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவத் தொடங்கியது. கர்நாடகாவில் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த 66 வயதானவருக்கும், 46 வயதான மருத்துவர் ஒருவருக்கும் டிசம்பர் 2ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதுவே, இந்தியாவில் பதிவான முதல் ஒமைக்ரான் தொற்று. இதன்பின்னர், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
இருவருக்கு ஒமைக்கரான்
இந்நிலையில், தெலங்கானாவில் வெளிநாட்டைச் சேர்ந்த இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. கென்யாவைச் சேர்ந்த 23 வயதான பெண் ஒருவருக்கும், சோமாலியாவைச் சேர்ந்த 22 வயதானவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களுடன் மூன்றாவது நபர் ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. ஆனால், அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்றும், தெலங்கானாவிற்கு உள்ளே நுழையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து தெலங்கானாவிற்கு மொத்தம் 5 ஆயிரத்து 396 பேர் வந்துள்ளனர்.
மேலும், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா என தெலங்கானாவின் அண்டை மாநிலங்களில் ஏற்கெனவே ஒமைக்ரான் பரவியிருந்த நிலையில், தெலங்கானாவில் தற்போது இரண்டு பேருக்கு உறுதியாகியுள்ளது. இதனால், யாரும் அச்சப்பட வேண்டாம் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
கென்யா இளம்பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சோமாலியாவைச் சேர்ந்தவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஒமைக்ரான் பரவலைத் தடுக்க, தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அரசு கடுமையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விரைவில் ஒமைக்ரான் பேரலை... 2 டோஸ் தடுப்பூசிப் பூசி பயனளிக்காது...