புதுச்சேரி: புதுச்சேரி 100 அடி சாலையில் இந்திரா காந்தி சதுக்கம் அருகில் வணிகவரி வளாகம் இயங்கி வருகிறது. புதுச்சேரி வணிகவரித்துறை அதிகாரிகள் மீது ஊழல் புகார்கள் அடுக்கப்பட்டதையடுத்து, நேற்று (ஜன.5) புதுச்சேரி வணிகவரித்துறை அலுவலகத்தில், சிபிஐ அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில் இருந்து 3 கார்களில் சென்ற சிபிஐ அதிகாரிகள், ஒட்டுமொத்த அலுவலகத்தையும் சோதனையிட்டனர்.
இந்த சோதனையின்போது பெண் அதிகாரி ஒருவரை, சிபிஐ அதிகாரிகள் சென்னை சாஸ்திரி பவனுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரி வசூலிப்பில் முறைகேடு செய்ததாக வணிக வரித்துறை அதிகாரிகள் ஆனந்தன், முருகானந்தம் ஆகியோர் மீது ஆதாரங்களுடன் புகார் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கடந்த இரண்டு மாதங்களாக இரண்டு அதிகாரிகளையும் சிபிஐ அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.