மொரேனா (மத்தியபிரதேசம்):இந்தியாவில் அழிந்துபோன விலங்கினமான சிவிங்கிப் புலிகளை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து இனப்பெருக்கம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, தென் ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கிப் புலிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த புலிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்து விடப்பட்டன. பிரதமர் மோடி தனது 72வது பிறந்தநாளையொட்டி, கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்த சிவிங்கிப் புலிகளை குனோ பூங்காவில் திறந்து விட்டார். இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிப் புலிகள் விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த புலிகளை வனத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதில் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சாஷா என்ற பெண் சிவிங்கி புலி, கடந்த மார்ச் மாதம் சிறுநீரகக் கோளாறு காரணமாக உயிரிழந்தது. அதேபோல், தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட உதய் என்ற சிவிங்கிப் புலி கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தது. சிவிங்கிப்புலி ஷாஷா இறந்த ஒரு மாதத்திற்குள் மற்றொரு சிவிங்கிப் புலியான உதய் உயிரிழந்தது.
இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட தக்ஷா என்ற சிவிங்கிப் புலி உயிரிழந்தது. இனப்பெருக்கத்திற்காக ஆண் சிவிங்கிப் புலிகள் இருந்த இடத்தில் பெண் சிவிங்கிப்புலி தக்ஷாவை திறந்து விட்டியிருந்த நிலையில், ஆண் சிவிங்கி புலி தக்ஷாவை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.