போபால் : மத்திய அமைச்சருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச வீடியோ கால் பேசி பணம் பறிக்க முயன்ற கும்பலை டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.
மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல். கடந்த ஜூன் மாதம் அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலிடம் வாட்ஸ் அப் ஆபாச வீடியோ கால் மூலம் மர்ம நபர்கள் பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது தனிச் செயலாளர் கடந்த ஜூன் மாதம் இறுதியில் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேலை தொடர்பு கொண்ட மொபைல் நம்பர்களின் இருப்பிடம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த மொபைல் நம்பர்கள் அசாம் மாநிலத்தில் இருப்பதாக போலீசாருக்கு சிக்னல் காட்டி உள்ளது. இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், அமைச்சரை தொடர்பு கொண்ட ஒரு செல்போன் சிம் 31 ஐஎம்ஐ நம்பர்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மற்றொரு செல்போன் நம்பர் 18 ஐஎம்ஐ களில் பயன்படுத்தப்பட்டதை கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து தொடர் விசாரணை நடத்திய அதிகாரிகள் எம்.டி. வாகீல் மற்றும் எம்.டி சாஹிப் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் இருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.