டெல்லி: கர்நாடக மாநில கல்வி நிலையங்களில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளனர். ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தாவும், சுதான்சு துலியா இருவரும் இந்த மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.
ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என ஹேமந்த் குப்தாவும், தடை செல்லாது என சுதான்சு துலியாவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த வேறு தீர்ப்புகளினால், இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் முன்னதாக ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் ஹிஜாப் குறித்த மேல்முறையீட்டு வழக்கில் இன்றுகூடிய நீதிபதி ஹேமந்த் குப்தா ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று வழக்கை தள்ளுபடி செய்தார், அதே நேரத்தில் நீதிபதி சுதான்சு துலியா அவற்றை அனுமதித்தார்.
நீதிபதி ஹேமந்த் குப்தா தனது தீர்ப்பில், 'கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை தீர்ப்பை உறுதி செய்து, “எனது உத்தரவில் 11 கேள்விகள் உள்ளன. மேல்முறையீடுகளுக்கு எதிரான அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளேன். மேல்முறையீடுகளை தள்ளுபடி செய்ய நான் முன்மொழிகிறேன்’’ என்றார்.
மறுபுறம், நீதிபதி சுதன்சு துலியா அனைத்து மேல்முறையீடுகளையும் அனுமதித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்கிறார். அதில் "எனது தீர்ப்பின் முக்கிய சாராம்சம் என்னவென்றால், அத்தியாவசிய மத நடைமுறையின் முழு கருத்தும் சர்ச்சைக்கு இடமானதல்ல. அதனால்,ஹிஜாப் அணிவதை தடுக்கக்கூடாது. உயர் நீதிமன்றம் தவறான பாதையில் சென்றது. இது அரசியலமைப்புச்சட்டத்தின் பிரிவு 14 மற்றும் 19படி நடைமுறைப்படுத்தலாம்," என்று துலியா கூறினார்.