பாங்குரா:மேற்குவங்க மாநிலத்தின் பாங்குரா மாவட்டத்தில் உள்ள ஓண்டா ரயில் நிலையத்தில் ரயில்வே பராமரிப்பு ரயில் உடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்து காரணமாக கரக்பூர் - பாங்குரா - ஆத்ரா வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், இது குறித்து தெற்கு மத்திய ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பு அலுவலர் கூறுகையில், “ரயில்வே பராமரிப்பு ரயில் ஓண்டா ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, சரக்கு ரயில் சிவப்பு சிக்னலை கடந்து நிற்காமல் சென்றது. இதனால் சரக்கு ரயில், ரயில்வே பராமரிப்பு ரயில் உடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.
அதிகாலை 4.05 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 8 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு உள்ளன. மேலும், இதன் சீரமைப்புப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம், யுபி மெயின் லைன் மற்றும் யுபி லூப் லைன் ஆகியவை காலை 7.45 மணியளவில் சீரமைக்கப்பட்டது” எனத் தெரிவித்து உள்ளார்.
இதனிடையே, இந்த சரக்கு ரயில்கள் விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியது. அந்த வீடியோவில் ஏராளமான பெட்டிகள் தடம் புரண்டது போன்று இருந்தது. முன்னதாக, கடந்த ஜூன் 17ஆம் தேதி ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்தில் உள்ள அம்பாடோலா அருகில் சரக்கு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.