அமராவதி: ஆந்திரப்பிரதேசத்தில் தடையை மீறி நடந்த சேவல் சண்டையில் ஏற்பட்ட களேபரத்தில் இருவர் உயிரிழந்தனர். பண்டைய காலம் தொட்டு வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை மற்றும் ஆட்டு சண்டை எனப்படும் கிடா முட்டு, ரேக்ளா ரேஸ், குதிரை வண்டி பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு தனி இடம் உண்டு.
பண நோக்கம், குடிவெறி, லஞ்சம், சூதாட்டம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு குடும்பங்கள் சீரழிவை சந்திப்பதை அடுத்து அரசு இவ்விளையாட்டுகளுக்குத் தடை விதித்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு மட்டும் அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்தது. அதேநேரம் பல்வேறு பகுதிகளில் அரசின் தடையை மீறி சேவல் சண்டை உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.
குறிப்பாக ஆந்திராவில் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்றத் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்றது. காக்கிநாடா, கோனாசீமா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ஏலுரு, என்.டி.ஆர். மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் அரசு தடையை மீறி சேவல் சண்டை களைகட்டியது. ஹைதராபாத், உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேவல் சண்டைகளில் கலந்து கொள்ள திரளானோர் வந்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோடிக்கணக்கிலான ரூபாய் பந்தயங்களில் புரண்டதாகவும், தடையை மீறி நடைபெறும் போட்டிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் போலீசார் லஞ்சம் பெற்றுக் கொண்டு சேவல் பந்தயம் நடைபெற உறுதுணையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.