கர்னல் :அரியானாவில் அரிசி ஆலையின் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கர்னல் மாவட்டம் தரவாடி டவுன் பகுதியில் சிவ சக்தி என்ற தனியார் அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது.
வேலை முடிந்ததும் ஊழியர்கள் ஆலையிலேயே தங்க போதிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஏப். 18) அதிகாலை 4 மணி அளவில் அரிசை ஆலையின் 3 மாடிக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்த நேரத்தில் ஊழியர்கள் ஆலையில் தூங்கிக் கொண்டு இருந்து உள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் ஏறத்தாழ 30 ஊழியர்கள் ஆலையில் இருந்ததாகவும் அவர்கள் அனைவரும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை 4 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். விபத்து எப்படி நேர்ந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவகின்றனர். அதேநேரம் அரிசி ஆலையின் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்து நடத்த கட்டடத்தில் ஏறத்தாழ 100 தொழிலாளர்கள் தங்கி வந்ததாகவும், விபத்து நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் வேலைக்கு சென்றதால் உயிர் பலி கணிசமாக தவிர்க்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். தரவாடி பகுதியில் நூற்றுக்கணக்கான அரிசி ஆலைகள் இயங்கி வரும் நிலையில் அதை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை கழித்து வருகின்றனர்.
மேலும் இந்த விபத்தால் மற்ற அரிசி ஆலைகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தக் கோரி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க :Ileana D'Cruz : காதலனுக்கு முன் கர்ப்பத்தை அறிவித்த இலியானா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!