புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் உருக்காலைத்துறை அமைச்சர் ஆர்சிபி சிங் ஆகியோர் தங்களுடைய அமைச்சர் பதவியை இன்று (ஜூலை 6) ராஜினாமா செய்துள்ளனர். இந்த இருவரும் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நாளை ஜூலை 7ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்பதால், அதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்துள்ளனர்.
மாநிலங்களவையில் உறுப்பினராக இருக்கும் மத்திய அமைச்சர்கள், தங்களது பதவிக்காலம் நிறைவடையும்போது மீண்டும் அது தொடர வாய்ப்பளிக்கப்படாமல் பதவி விலகுவது இதுவே முதல் முறையாகும். நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, எம்.பி பதவிக்காலம் முடிந்து விட்டாலோ அல்லது தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக அமைச்சராகவோ ஒருவர் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டால், அவர் பதவியேற்ற நாளில் இருந்து ஆறு மாத காலங்களுக்குள் மக்களவையில் இருந்தோ அல்லது மாநிலங்களவையில் இருந்தோ உறுப்பினராக தேர்வாகலாம்.