போர்ட்லேன்ட் :அமெரிக்காவில் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் பஞ்சாப்பை சேர்ந்த இரண்டு சகோதர்ரகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் சுல்தான்பூர் லோதி அடுத்த பிதிபூர் கிராமத்தை சேர்ந்தவர் தில்ராஜ் சிங் என்ற தீபி. அவருடைய சகோதரர் கோரா. இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்து உள்ளனர். சகோதரர்கள் இருவரும் அதே கபுர்தலா மாவட்டத்தில் உள்ள கஞ்சலி கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் கூட்டாக தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் கொடுக்கல் வாங்கலில் சகோதரர்கள் இருவருக்கும், கஞ்சலி கிராமத்தை சேர்ந்தவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லேன்ட் நகரில் இருக்கும் வணிக வளாகத்தின் முன் இருதரப்புக்கும் இடையே பிசினஸ் தொடர்புக்கும் பேச்சுவார்த்தை நடந்து உள்ளது.
பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறிய நிலையில், இரு தரப்பினரிடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கஞ்சலி கிராமத்தை சேர்ந்தவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சகோதரர்கள் இருவரையும் சுட்டு விட்டு தப்பியதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு பதறி ஓடி வந்த மக்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்த சகோதரர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த அமெரிக்க போலீசார், கைது செய்யப்பட்டவர் குறித்த அடையாளங்களை வெளியிட மறுத்து விட்டனர். கொடுக்கல் வாங்கலில் சகோதரர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சகோதரர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களது சொந்த ஊருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினரும், ஒட்டுமொத்த கிராமும் சோகத்தில் மூழ்கி உள்ளது. இருவரின் சடலங்களையும் சொந்த ஊர் கொண்டு வர ஏற்பாடு செய்து வருவதாக உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க :கார் மீது டிரெய்லர் வாகனம் கவிழ்ந்து கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி!