டெல்லி: மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை சுற்றி உள்ள கதையில் புதிய திருப்பமாக, முன்னாள் மல்யுத்த வீராங்கனையான பபிதா போகத், ஒலிம்பிக் வீராங்கனை சாக்ஷி மாலிக்கை "காங்கிரஸின் கைகளில் இருக்கும் பொம்மை" என்று குற்றம் சாட்டியு உள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுகக் வலியுறுத்தியும் மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சனிக்கிழமை அன்று ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஒரு புதிய வீடியோவில், சாக்ஷி மாலிக்கும் அவரது கணவர் சத்யவ்ரத் காடியன்னும் அவர்களின் எதிர்ப்பைச் சுற்றி உள்ள 'தவறான கதைகளை' பற்றி எடுத்துக் கூறியதோடு அவர்களின் நோக்கங்களையும் தெளிவு படுத்தினார். அவர்களின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல என்று தெளிவுபடுத்திய அவர் மேலும் பாஜக-வை சேர்ந்த முன்னாள் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் மற்றும் தீரத் ராணா ஆகியோரால் தான் போராட்டத்திற்கான அனுமதி பெறப்பட்டது எனக் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் இணைப் பொறுப்பாளரான பபிதா போகத் ஞாயிற்றுக்கிழமை இந்தியில் ஒரு ட்வீட் வெளியிட்டார். அதில் ,"நேற்று எனது தங்கை மற்றும் அவரது கணவரின் வீடியோவைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டது மட்டுமின்றி சிரிக்கவும் செய்தேன். தங்கையால் காட்டப்பட்ட அந்த அனுமதித் தாளில் எனது கையெழுத்தோ அல்லது எனது கையொப்பமோ எங்கும் இல்லை என்பதை முதலில் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதில் சம்மதத்திற்க்கான எந்த ஆதாரமும் இல்லை, மேலும் அது என்னுடைய கவலையும் இல்லை”, என்று கூறியுள்ளார்.
சாக்ஷி மாலிக் காங்கிரஸின் கைப்பொம்மை என்று குற்றம் சாட்டிய அவர் “அக்கா பாதாம் மாவில் செய்த ரொட்டியை நீங்கள் சாப்பிடலாம், ஆனால் நானும் என் நாட்டு மக்களும் கோதுமையால் செய்த ரொட்டியையே சாப்பிடுகிறோம் என்பது அனைவருக்கும் புரியும், நீங்கள் காங்கிரசின் கைப்பாவையாகிவிட்டீர்கள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொண்டு உள்ளனர். இப்போது உங்கள் உண்மையான நோக்கத்தை நீங்கள் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஏனென்றால் இப்போது பொதுமக்கள் உங்களிடம் கேள்விகளைக் கேட்கிறார்கள், ”என்று பபிதா ட்வீட்டில் கூறினார்.
இதையும் படிங்க: சூரத்தில் ஒரு 'தங்கல்' - டீ வியாபாரியின் 3 மகள்கள் தேசிய சாதனை!