காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ்காரர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் சில நாள்களுக்கு முன்னர் முடக்கியது.
டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அந்தப் புகைப்படங்களை ராகுல் ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், அதை விதிமுறை மீறல் எனக் கூறி ராகுல் காந்தியின் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முதலில் முடக்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டுவந்த நிலையில், சுமார் 500க்கும் மேற்பட்ட காங்கிரசார் கணக்குகளை ட்விட்டர் முடக்கியது.
மீண்டும் வந்த ராகுல் கணக்கு
இந்நிலையில், காங்கிரசின் தொடர் புகார், அழுத்தத்தை அடுத்து ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மணிஷ் மகேஷ்வரி அமெரிக்காவுக்கு நேற்று (ஆகஸ்ட் 13) பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 14) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 22 காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஆகியவற்றின் முடக்கத்தை ட்விட்டர் நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. இதையடுத்து மேற்கண்ட கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.
இதைக் குறிக்கும் விதமாக காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாய்மையே வெல்லும் எனப் பொருள்படும்படி, ’சத்யமேவ ஜயதே’ என ட்வீட் செய்துள்ளது.
இதையும் படிங்க:’ஆக்.14 பிரிவினை நினைவு தினம்’ - பிரதமர் மோடி அறிவிப்பு