மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உள்ள டிஸ்பிளே பிக்சரை ட்விட்டர் நிறுவனம் நேற்று திடீரென நீக்கியது. இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதே புகைப்படத்தை டிஸ்பிளே பிக்சராக ட்விட்டர் நிறுவனம் வைத்துவிட்டது.
'டிஸ்பிளே பிக்சர் காணும்' அமித்ஷாவை தேடவைத்த ட்விட்டர்!
டெல்லி: மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் டிஸ்பிளே பிக்சரை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
கிடைத்த தகவலின்படி, யாரோ அந்தப் புகைப்படத்துக்கு உரிமை கொண்டாடியதாகவும், இதனால் ட்விட்டர் அவரது படத்தை காண்பிக்காமல் சில நிமிடங்கள் முடக்கிவைத்ததாகவும் கூறப்படுகிறது. புகைப்படத்திற்கு உரிமை கோரிய நபர் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமித் ஷா சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர். அரசியல் கட்சித் தலைவர்களைப் பின்தொடருவதில் பிரதமர் மோடிக்கு அடுத்தப்படியாக அவர் உள்ளார். சுமார் 23.6 மில்லியன் மக்கள் அவரைப் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.