சான் பிரான்சிஸ்கோ : ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி சமூக ஊடக தளத்தின் தலைமை நிர்வாக அலுவலர் பதவியில் இருந்து விலகுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
அவருக்குப் பிறகு ட்விட்டரின் தற்போதைய தலைமை தொழில்நுட்ப அலுவலர் பராக் அகர்வால் பதவியேற்பார். எனினும் இவரது பதவிக்காலம் 2022இல் முடியும் வரை டோர்சி தலைமை நிர்வாக குழுவில் இருப்பார்.
பராக் அகர்வால் 2011 முதல் ட்விட்டரில் இருந்து வருகிறார். டோர்சி ட்விட்டரில் பதிவிட்ட ஒரு கடிதத்தில், நிறுவனத்தை விட்டு வெளியேறுவது குறித்து "உண்மையில் வருத்தமாக இருக்கிறது. இருப்பினும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனது தனிப்பட்ட முடிவு” எனக் கூறியுள்ளார்.
சிலிகான் வேலியில் மற்றொரு இந்திய சிஇஓ
மேலும், “நான் ட்விட்டரை விரும்புகிறேன்” எனவும் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இணை நிறுவனர் ஜாக் டோர்சி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியில் இருந்து விலகுவார் என்ற தகவலால் ட்விட்டரின் பங்குகள் உயர்ந்து வருகின்றன.
ட்விட்டரின் பங்கு, தொடர்ந்து சந்தையில் குறைவாக விற்பனை ஆகிவந்தது. இந்நிலையில் இன்று (நவ.29) ட்விட்டர் பங்குகள் 10 சதவீதத்துக்கு அதிகமாக உயர்ந்தன. பராக் அகர்வால் இந்தியர் ஆவார். ஏற்கெனவே, இந்தியர் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக இருந்து வரும் நிலையில், தற்போது ட்விட்டரின் சிஇஓவாக மற்றொரு இந்தியர் ஒருவர் பொறுப்பேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ட்விட்டரில் மாஸ் காட்டிய சூர்யா