தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்பட ஐந்து மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ட்விட்டரில் தவறான தகவல் பரப்புவோர் வன்முறையைத் தூண்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
ஜனநாயக ரீதியான உரையாடல்கள், அரசியல் விவாதங்கள், மக்களின் பங்கேற்பு ஆகியவற்றை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல புதிய கொள்கை வகுத்துள்ளதாக ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டர் வெளியிட்ட அறிக்கையில், "ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில நாள்களே உள்ள நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த கொள்கையை அமல்படுத்துகிறோம்.
சமூக வலைதளத்தைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து பாதுகாக்க உலக அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தவறான தகவல்கள் பரப்புவோர், வன்முறையைத் தூண்டுவோரிலிருந்து ட்விட்டர் பாதுகாக்கப்படும்.
நம்பகமான தகவல்கள் எளிதாகக் கண்டறியப்படுவதை லட்சியமாகக் கொண்டுள்ளோம். அதே சமயத்தில், தவறான தகவல்கள் பகிரப்படுவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.