டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதியான முண்ட்கா பகுதியிலுள்ள சேமிப்புக் கிடங்கில் வெள்ளிக்கிழமை (மே 13) மாலை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
சம்பவ பகுதியில் 16-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 50 முதல் 60 பேர் வரை மீட்கப்பட்டு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில், "மாலை 4 மணிக்கு மேல் அந்த பகுதியில் தீ விபத்து நடந்துள்ளதாக தகவல் கிடைத்தது. அதன் பெயரில் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நிகழ்ந்த தீ விபத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், " தீ விபத்து செய்தி அறிந்து துயருற்றேன். தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காஷ்மீரில் திடீரென தீப்பற்றிய பேருந்து - 3 பேர் உயிரிழப்பு; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!