தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துருக்கி, சிரியாவில் 15,000-ஐ கடந்த உயிர் பலி - மீட்பு பணிகள் தீவிரம்!

ஆபரேஷன் தோஸ்த் திட்டம் மூலம் இந்தியா அனுப்பிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் துருக்கி மற்றும் சிரியா நாடுகளை சென்றடைந்தன. நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய குழுவினர் மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆபரேஷன் தோஸ்த்
ஆபரேஷன் தோஸ்த்

By

Published : Feb 9, 2023, 9:54 AM IST

அங்காரா: துருக்கியை அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் வரலாறு காணாத அளவில் உயிர் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வானுயர் கட்டடங்கள் சீட்டுகட்டு போல் சரிந்து விழுந்ததன. கட்டட இடிபாடுகளில் சிக்கி குவியல் குவியலாக கிடக்கும் மனித சடலங்களை மீட்பு குழுவினர் கண்டெடுத்து வருகின்றனர்.

இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் ஏறத்தாழ 10 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் உருக்குலைந்து உள்ளதால் அனைத்து பகுதிகளிலும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

அதேநேரம் கட்டட குவியல்களுக்குள் இருந்து குழந்தைகள் அதிர்ஷடவசமாக மீட்கப்பட்டு வருவது துயரிலும் சிறு ஆறுதல் அளிக்கும் நிகழ்வாக காணப்படுகிறது. மீட்கப்படும் குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்து மீட்பு குழுவினர் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வீடுகளை இழந்த மக்கள் உள்நாட்டிலே அகதிகளாக மாறும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் வெப்பநிலை 1 டிகிரி என்ற அளவில் நிகழ்வதால் கடும் குளிர் நிலவுகிறது. மேலும் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கூடாரம், போர்வை உள்ளிட்ட பொருட்கள் இன்மையால் துருக்கி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நில நடுக்க சேதங்களை துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் பார்வையிட்டார். வீதிகளில் வசிக்கும் மக்களை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்று எர்டோகன் தெரிவித்தார். மேலும், தற்காலிக கூடாரங்கள், மற்றும் தற்காலிக வீடுகளை அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூகம்பத்தால் பாதிப்படைந்த துருக்கி மற்றும் சிரியாவுக்கு "ஆபரேஷன் தோஸ்த்" என்ற திட்டத்தை துவக்கி இந்தியா உதவி வருகிறது. இந்தியாவில் இருந்து பல்வேறு கட்டங்களாக நிவாரணம் மற்றும் மருத்துவ பொருட்களை சுமந்து கொண்டு விமானப் படை விமானங்கள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு சென்றன.

துருக்கியின் நுர்தகி பகுதியில் இந்தியாவின் 3 தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் மற்றும் நாய்கள் படை தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவும் வகையில் அனுப்பப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் துருக்கி தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹதே உள்ளிட்ட அதிக நில நடுக்க சேதங்களை சந்தித்த பகுதிகளில் தற்காலிக முகாம்களை அமைத்து இந்திய மருத்துவர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இந்திய விமானப் படையின் நிவாரணம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விமானம், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு தரைகடல் நாடான சிரியாவை சென்றடைந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நாட்டிலே முதல் முறையாக திருநங்கை - திருநர் தம்பதிக்கு குழந்தை!

ABOUT THE AUTHOR

...view details