சென்னை: திருப்பதி தேவஸ்தான நிர்வாகி தர்மான ரெட்டியின் மகன் சந்திரமெளலிக்கும், முன்னாள் தேவஸ்தான நிர்வாகியான சேகர் ரெட்டியின் மகளுக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அடுத்த மாதம் திருமணம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க தர்மா ரெட்டி குடும்பத்தினர் கடந்த 18-ம் தேதி சென்னையில் தங்கியிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சந்திரமெளலிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மீட்ட உறவினர்கள் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கடந்த 18-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் "கடந்த 18-ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட சந்திரமெளலிக்கு உயிர்காக்கும் எக்மோ கருவிகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் இன்று காலை 8.20 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. ஏற்கனவே கண்தானம் செய்ய சந்திரமெளலி பதிவு செய்திருந்த நிலையில் அதன்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது" என மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழர்களிடம் நூதன முறையில் ரூ.2.67 கோடி அபேஸ்.. டெல்லியில் ரயில்களை எண்ணிய அவலம்!