நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை வேகம் எடுத்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன சீட்டுகளை வரும் ஏப்ரல் 11ஆம் தேதி இரவுமுதல் ரத்து செய்யவிருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் நாளொன்றுக்கு 300 ரூபாய் தரிசன சீட்டு 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இலவச தரிசன சீட்டுகளை வாங்குவதற்காகப் பக்தர்கள் நாள்தோறும் அதிகளவில் கூடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் ஏப்ரல் 12ஆம் தேதிமுதல் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்துசெய்யப்படுகிறது. மேலும் மீண்டும் இலவச தரிசன சீட்டுகள் வழங்குவது குறித்த அறிவிப்பு, கரோனா பரவல் குறைந்தபின் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த ஜூன் 11ஆம் தேதிமுதல் கட்டுப்பாடு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து அக்டோபர் 27ஆம் தேதி இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இலவச தரிசனம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.