ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ராஜகோபால் ரெட்டி, ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதனால், முனுகோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், ராஜகோபால் ரெட்டி பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் குஷுகுந்தல பிரபாகர் ரெட்டி போட்டியிட்டார்.
இத்தேர்தலில் டிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவியது. அரசியல் கட்சியினர் கடந்த சில வாரங்களாக வாக்காளர்களைக் கவர, பிரியாணி, மது பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வாரி வழங்கினர். இதைத் தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி முனுகோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.