பிகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் வசிக்கும் ஓம் பிரகாஷ் ஷா என்பவர் 14 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டும் விவகாரத்தில் இவருக்கும், சாகர் குமார் மஹோதோ என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஓம் பிரகாஷிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டு சாகர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு ஓம் பிரகாஷ் ஒப்புக் கொள்ளாத நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் வாக்குவாதத்தில் தொடங்கிப் பின்னர் துப்பாக்கிச் சூடாக உருவெடுத்தது.
இதில் சாகர் குமார் (18) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சாகர் தரப்பினர் ஜெய் ராம் ஷா, அவரது மகன் குந்தனை சரமாரியாகத் தாக்கி துப்பாக்கியால் சுட்டதில், ஜெய் ராம் ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குந்தன் (26), சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும், இருதரப்பினரின் குடும்பத்தாரும் இந்த மோதலில் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆய்வாளர் நந்திஜி பிரசாத், இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததை உறுதி செய்தார். முதற்கட்ட விசாரணையில் நிலத் தகராறுதான் காரணம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது .
இதையும் படிங்க:பொய் வாக்குறுதி அளித்து நடிகைக்கு பாலியல் வன்கொடுமை