மேற்கு வங்கம்:மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடந்த தாக்குதலை அடுத்து, இன்று (ஜன.06) திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்கர் ஆத்யாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ரேஷன் ஊழல் வழக்கில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா வீட்டில் தொடர்ந்த 17 மணி நேர நீண்ட சோதனைக்குப் பின், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் ரேஷன் விநியோகத் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்கு விசாரணையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை, மம்தா பானர்ஜி அமைச்சரவையின் மூத்த உறுப்பினர் ஜோதிப்ரியா மல்லிக்கை கைது செய்தது.
அதைத் தொடர்ந்து, ஊழல் குற்றச்சாட்டு அடிப்படையில் நேற்று (ஜன.05) மேற்கு வங்க மாநிலத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், ரேஷன் ஊழல் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களான ஷாஜகான் ஷேக் மற்றும் சங்கர் ஆத்யா வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.