கொல்கத்தா :புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு குறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹுவா மொய்த்ரா, நாட்டில் குடியரசு இறந்து விட்டதாகவும், கடவுள் தான் அரசரை காப்பாற்றுவார் என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 970 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு இடர்களுக்கு இடையே பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார். விமரிசையாக நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தில் இருந்து ஆதீனங்கள், திரை மற்றும் பொதுப் பிரபலங்கள் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜையை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து சென்ற ஆதீனங்கள், பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினர். பிரதமர் மோடி, செங்கோலின் முன் நெடுஞ்சாண்கிடையாக 30 நொடிகளுக்கு மேல் விழுந்து வணங்கினார் . ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்று, செங்கோலை நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார்.
புதிய நாடாளுமன்ற திறப்பு மற்றும் செங்கோல் நிறுவியது உள்ளிட்டவைகளை கடுமையாக விமர்சித்து எதிர்க்கட்சிகள் கருத்து வெளியிட்டு வந்தன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "நாடாளுமன்ற திறப்பு விழாவை தனக்கான பட்டாபிஷேக விழாவாக பிரதமர் நினைத்துக் கொள்வதாக தன் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்தார்.
அதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே, சிவசேனா உத்தவ் தாக்ரே அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் உள்ளிட்டோரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தது குறித்து விமர்சித்தனர்.