ஐதராபாத் :119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநில சட்டப் பேரவைக்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற 60 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் ஆட்சியை தக்கவைக்க் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின், பி.ஆர்.எஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், பாஜக கட்சிகளும் என மும்முனை போட்டி நிலவுகிறது.
பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில், அடிலாபாத், கம்மம், வாராங்கல், மகபூப்நகர் மாவட்டங்களை சுற்றி உள்ள மலைக் கிராம மக்கள் தங்களது ஜனநாயக கடமையான வாக்களிப்பதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அதிகாலையே எழுந்து கொள்ளும் இப்பகுதி மலைக் கிராம பழங்குடியின மக்கள், ஒரு கையில் குழந்தைகளையும், மற்றொரு கையில் உணவு பொட்டலங்களையும் சுமந்து கொண்டு காடு, மலை, நீரோடை என ஏறத்தாழ 20 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த பயணங்கள் அனைத்தும், அவர்களது வாழ்வாதாரத்திற்காக அல்ல, சட்டமன்ற தேர்தல் அன்று தங்களது ஜனநாயக கடமையான வாக்களிப்பதற்கு. ஆமாம், சரிவர சாலை வசதி, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இன்னும் இந்த பழங்குடியின மக்களின் கிராமங்களை சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது.