பிரதாப்கர் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் பழங்குடியினப் பெண் ஒருவரை அவரது கணவர் மற்றும் மாமியார் அடித்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வீடியோ குறித்து விசாரணையைத் துவங்கிய போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ பரவியதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அவரது X பக்கத்தில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவைப் பதிவிட்டு உள்ளார். அவரது பதிவில், “பிரதாப்கர் மாவட்டத்தில், ஒரு குடும்பத் தகராறில் பெண் ஒருவர் அவரது மாமியாரால் நிர்வாணமாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. நாகரீக சமுதாயத்தில் இதுபோன்ற கொடூரமான குற்றங்களுக்கு இடமில்லை. இந்த கொடூரத்திற்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விரைவு நீதிமன்றத்தில் தண்டிக்கப்படுவார்கள்” என பதிவிட்டு இருந்தார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு திருமணமாகி ஒரு ஆண்டே ஆனதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண் அவர்களது கிராமப் பகுதியில் வேறு ஒரு நபருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் திருமணம் தாண்டிய உறவினை தெரிந்த கணவர் அப்பெண்ணை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் திருமணம் தாண்டிய உறவினை கைவிட மறுத்ததால் அவரது கணவர் அவரை அடித்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து பிரதாப்கர் போலீசார் விசாரணையைத் துவங்கினர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை கைது செய்யும் முயற்சியின் போது, அவர்கள் தப்பி ஓட முயற்சித்ததால் அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும், அதற்காக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் அதன் X சமூக வலைத்தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், “ராஜஸ்தானின் பிரதாப்கரில் நடந்த கொடூரமான சம்பவத்தை NCW வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு பெண் துன்புறுத்தப்பட்டு, ஆடைகளை அவிழ்த்து, வீடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு இது நடந்திருந்தாலும், காவல்துறையின் செயலற்ற தன்மை ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அதன் பதிவில் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் துரிதமாக நடவடிக்கை எடுக்கும் படி ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிடம், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியதாகக் கூறப்படுகிறது. முன்னதாக மணிப்பூர் கலவரத்தில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
பாஜக ஆளும் மாநிலத்தில் நிகழ்ந்த அந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில், தற்போது காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் அதே போன்றதொரு சம்பவம் நடந்துள்ளதால் எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை எழுப்பும் என்பதால் வெள்ளிக்கிழமை இரவு ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. ராகுல்காந்தி பேசியதாகக் கூறப்பட்ட நிலையில் சனிக்கிழமை (செப்.2) அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Jet Airways : ரூ.538.62 கோடி பணமோசடி.. ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் அமலாக்கத்துறையால் கைது.!