ஆந்திரா:ஆந்திர மாநில அரசுக்கு அம்மாநில போக்குவரத்து துறை எழுதியுள்ள கடிதத்தில், "முதலமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணத்திற்கும் பாதுகாப்புக்கும் வழங்கப்படும் வாகனங்களுக்கு 17 கோடியே 5 லட்சம் ரூபாயை மாநில அரசு செலுத்த வேண்டியுள்ளது. இந்த தொகை கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
இதனை உடனடியாக செலுத்தாவிட்டால், முதலமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணத்திற்கு வாகனங்களை வழங்க முடியாது. முதலமைச்சரின் மாவட்ட சுற்றுப்பயணங்கள் விரைவில் தொடங்கவுள்ளதால், நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பிரமுகர்களின் சுற்றுப்பயணத்திற்கு நான்கரை கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த நிதியை மாநில அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து, போக்குவரத்து துறைக்கு செலுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.