பாலசோர்: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே மேற்கு வங்க மாநிலம் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ஷாலிமார் - சென்னை(கோரமண்டல் எக்ஸ்பிரஸ்), பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் கடந்த 2-ஆம் தேதி விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 700-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்து காரணமாக 45 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு, 30-க்கும் மேற்பட்ட ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. ரயில் விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்பு மற்றும் மீட்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வந்தது. இதில், தேசிய பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவம், தீயணைப்பு மற்றும் மீட்பு, ரயில்வே துறை, மருத்துவத்துறை என பல துறைகளை சேர்ந்தவர்கள் இரவு பகலாக கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே துறை சார்பில் விபத்தில் சேதமடைந்த ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு தண்டவாளங்கள் சீரமைக்கும் பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வந்தன.
ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த மூன்று நாட்களாக விபத்து நடந்த இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகள் இரவு பகலாக மேற்பார்வையிட்டார். ரயில் பாதை மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நேற்று இரவு 51 மணிநேரத்திற்கு பிறகு நேற்று இரவு 11 மணிக்கு ரயில் சேவை தொடங்கியது. முதலில், சோதனை அடிப்படையில் சரக்கு ரயில் ஒன்றை அந்த பாதையில் இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.