டெல்லி: ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்றிரவு சென்று கொண்டிருந்த பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில் தடம் புரண்டது. இதில் அந்த ரயிலின் சில பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ஷாலிமர் (மேற்குவங்கம்) - சென்னை விரைவு ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இதில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு, அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது விழுந்தது. இந்த கோர விபத்தில் இதுவரை 261 பேர் உயிரிழந்துள்ளதாக தென்கிழக்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மேலும், படுகாயம் அடைந்த 650க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கோபல்பூர், பாலசோர், பத்ராக், சோரோ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சங்கிலித் தொடர் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்த நிலையில், ரயில் விபத்து தொடர்பாக டெல்லியில் ரயில்வே அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 3) ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்து கொண்டார். விபத்து நடந்த இடத்தில் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படுகாயம் அடைந்துள்ள பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்துள்ளார். இதனிடையே விபத்து நடந்த ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதிக்கு பிரதமர் மோடி இன்று செல்ல உள்ளதாகவும், கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்திக்க இருப்பதாகவும் பிரதமர் அலுவலக ட்விட்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.