ஹைதராபாத்:ஜூன் 2-ஆம் தேதி ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தின் பஹானகா பஷார் ரயில் நிலையம் அருகே பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில், மேற்கு வங்க மாநிலத்தின் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றூ வருகின்றனர்.ஒடிசாவில், விபத்து நடந்த இடத்தில் இரவு பகலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களால் நடத்தப்பட்ட சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து, அந்த வழித்தடத்தில் தற்போது வழக்கமாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Train Accidents: ஜூன் 2 முதல் 9 வரை இந்தியாவில் நிகழ்ந்த ரயில் விபத்துகள்! - ஜன சதாப்தி ரயில் விபத்து
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே உள்ள பஹானகா பஷார்(Bahanaga Bazar) பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் கடந்த 2-ஆம் தேதி விபத்தில் சிக்கிய நிலையில், அந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நடந்த 8 நாட்களில் நாடு முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகள் குறித்து விரிவாக பார்க்கலாம்..
கோப்புப்படம்
கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் நிகழ்ந்த ரயில் விபத்துகள்:
- ஜூன் 5 ஒடிசா மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பர்கர் மாவட்டத்தில் தனியார் சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தனியார் ஆலைக்காக பயன்படுத்தப்படும் வழித்தடத்தில் ஏற்பட்ட இந்த விபத்தால் எவ்வித உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
- ஜூன் 5 கொல்லம் - சென்னை இடையே இயக்கப்படும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் பெரிய விரிசல் இருந்துள்ளது. இது ரயில்வே ஊழியர்களால் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விரிசல் விழுந்த ரயில் பெட்டி நீக்கப்பட்டு மாற்று ஏற்பாட்டின் பேரில் அந்த ரயில் சென்னைக்கு இயக்கப்பட்டது.
- ஜூன் 7 மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள சாபுரா பிதோனி என்ற இடத்தில் கேஸ் (LPG) ஏற்றி வந்த சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.
- ஜூன் 7: சென்னை ஆவடி அருகே உள்ள திருநின்றவூர் ரயில் தண்டவாளத்தில் கிடந்த தென்னை மரத்துண்டு ரயில் இன்ஜினில் சிக்கியது. இதனால் ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜூன் 8 நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் தடம் புரண்டது. இதில் கடைசி பெட்டி தடம் புரண்ட விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. துரிதமாக செயல்பட்ட ரயில்வே ஊழியர்கள் தடம்புரண்ட பெட்டியை சரி செய்தனர். இதனால் நேற்று மாலை நிறுத்தப்பட்ட மலை ரயில் சேவை இன்று(வெள்ளிக்கிழமை) காலை தொடங்கியது.
- ஜூன் 8 வியாழன் இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்ற போது ஜன் சாதப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது. ரயில்வே ஊழியர்கள் சுமார் 2 மணி நேரத்தில் தடம் புரண்ட நிலை நிறுத்தி வெள்ளிக்கிழமை அதிகாலை பணிமனைக்கு கொண்டுச் சென்றனர்.
- ஜூன் 8 ஒடிசா மாநிலத்தின் நுபாடா மாவட்டத்தில் காரியார் சாலை துர்க் - புரி விரைவு ரயிலில் ஏசி பெட்டியில் இருந்து புகை வந்துள்ளது. இதனை உணர்ந்த பயணிகள், உடனடியாக ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே பணியாளர்கள் தீயை அணைத்தனர். பிரேக் பேடுகளில் ஏற்பட்ட உராய்வால் தீ ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- ஜூன் 8:ஒடிசா மாநிலத்தில், பாத்ரக் மாவட்டம் மஞ்சூரி ரோடு ரயில் நிலையம் அருகே தண்டவாளங்களுக்கு இன்டர்லாக்(Interlock) நடுவில் பெரிய கல் ஒன்று இருந்தது. இதைக்கண்ட ரயில்வே ஊழியர் துரிதமாக செயல்பட்டு அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தக் கல் எப்படி அந்த இடத்தில் வந்தது என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Jun 9, 2023, 3:04 PM IST