ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திரநகர் பகுதியில் சாலையோரம் மாரடைப்பால் மயங்கி விழுந்த நபரை அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராஜேந்திரநகர் பகுதியில் இன்று (பிப். 24) போக்குவரத்து காவலர் ராஜசேகர் வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாலையோரம் நடந்து சென்ற நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுவதை கவனித்தார்.
இதையடுத்து உடனடியாக அருகே சென்று அவரை எழுப்ப முயன்றுள்ளார். ஆனால், அவர் சுயநினைவை இழந்துள்ளதும், மூச்சு விட சிரமப்படுவதும் இவருக்கு தெரியவந்தது. இதனால் உடனடியாக அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்க தொடங்கினார். பல நிமிடங்கள் போராடிய நிலையில், மயங்கிய நபரின் உடலில் அசைவுகள் தெரிந்தன. மூச்சுவிடத் தொடங்கினார்.