பாலசோர்: கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்றைய முன்தினம் (ஜூன் 2) பயங்கர விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, மாநில நிர்வாகம் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றது. இந்த கோர விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தென்கிழக்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் நேற்று (ஜூன் 3) பிற்பகலில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான ரயில்கள் மற்றும் ரயில்வே வழித்தடத்தை சீர் செய்யும் பணிகள் தொடங்கியது. தொடர்ந்து, நேற்று நள்ளிரவிலும் நடைபெற்ற சீரமைப்பு பணிகள், இன்று (ஜூன் 4) காலையிலும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், நேற்று விபத்து நடைபெற்ற ஒடிசாவின் பாலசோர் பகுதிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, நடைபெற்ற சம்பவத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை என்றும், இந்த விபத்து மனிதத் தவறால் நடைபெற்றதா அல்லது தொழில்நுட்ப கோளாறால் நிகழ்ந்ததா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.