டி.ஆர்.பாலுவின் விலாசலில் அதிர்ந்து போன நாடாளுமன்றம் டெல்லி:நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடர் இன்று (செப்.18) டெல்லியில் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருந்து அனைத்து எம்பிகளும் டெல்லிச் சென்றுள்ளனர். இந்தக்கூட்டத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் என அனைத்து பற்றியும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தக் கூட்டத்தொடருக்குப் பிறகு, காவிரி விவகாரம் குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழக எம்பிக்கள் அனைவரும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளனர்.
தமிழகத்தில் தலைதூக்கியுள்ள காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், காவிரி மேலாண்மையின் அறிக்கைகளை முன்னிறுத்தி, மத்திய அமைச்சர் முன்னிலையில் முறையிடப்படும் என்றும் விரைவில் காவிரி விவகாரத்திற்கு முடிவு கொண்டு வர இந்தக் கூட்டம் உதவும் என நம்பப்படுகிறது.
இன்று (செப்.18) டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் திமுக எம்.பி டி.ஆர். பாலு பங்குபெற்றார். சிறப்புக் கூட்டத் தொடரில் எம்.பி டி.ஆர். பாலு பேசியதாவது, "தற்போது கூட்டப்பட்டிருப்பது ஒன்றும் சிறப்பு கூட்டம் அல்ல. வழக்கமான ஒரு நாடாளுமன்றக் கூட்டம்தான். எந்த ஒரு தேவையுமே இல்லாமல், இதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் பணம் செலவழித்து கட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஏன் முந்தைய கூட்டத் தொடர் நடத்தப்படவில்லை?
நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்து 76-வது ஆண்டு நடைபெறுகிறது. 75 ஆண்டுகால நிகழ்வுகளை நினைவுகூற வேண்டுமானால் கடந்த 2022-ஆம் ஆண்டே செய்திருக்க வேண்டும். இப்போது ஏன் நினைவு கூறுகிறோம்? 1962ஆம் ஆண்டு திமுக நாடாளுமன்றத்தில் நுழைந்தது. அப்போது முதல் அனைத்து விவாதங்களிலும் திமுக பங்கேற்று வருகிறது. திராவிட நாடு என்ற கோரிக்கையை கைவிட்டாலும், அதற்கான காரணங்கள் இன்றளவிலும் உயிரோடு இருக்கின்றன என நாடாளுமன்றத்தில் அறிவித்தார் அண்ணா.
1969-ல் பெரும்பான்மை இழந்த போது இந்திரா காந்தி அரசுக்கு திமுக ஆதரவு அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை பறிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய செயல், ஏற்கனவே இருக்கும் புண்ணில் உப்பைக் கொட்டுகிற செயல். 1999-ல் நெருக்கடியான சூழலில் வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவு அளித்தது. அப்போது அதிமுகவால் நெருக்கடியை சந்திப்பதாக வாஜ்பாயே கூறியிருந்தார். வாஜ்பாய் ஆட்சியில் பொக்ரான் அணுகுண்டு சோதனை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் திமுக ஆதரவு அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, மணிப்பூர் மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை" என்ற டி.ஆர்.பாலுவின் ஆவேசப் பேச்சு நாடாளுமன்றத்தில் இருந்தவர்களை அதிரச் செய்துள்ளது. திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே சனாதன ஒழிப்பு பேச்சு விவகாரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையேஅதிர வைத்த நிலையில், தற்போது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் திடீரென திராவிட நாடு கோரிக்கை குறித்த அண்ணாவின் உரையை சுட்டிக்காட்டி திமுக எம்.பி டி.ஆர் பாலு பேசியது அனைவரது புருவத்தையும் உயரச்செய்துள்ளது.
இதையும் படிங்க:"பன்முகத்தை கொண்டாடும் ஒவ்வொரு நேரத்திலும் நாடாளுமன்றம் தலை நிமிர்ந்து நிற்கிறது" - பிரதமர் மோடி!