லாகூர்:பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் 2018ஆம் ஆண்டு முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். அப்போது வெளிநாடுகளில் இருந்து அவருக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டியது. பரிசுப் பொருட்கள் தொடர்பான விவரங்களை அவர் மறைத்ததாக தேர்தல் ஆணையம் புகார் அளித்தது.
இந்த வழக்கு கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பலமுறை சம்மன் அனுப்பியும் பாதுகாப்பை காரணம் காட்டி, இம்ரான் கான் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து நீதிபதி சஃபார் இக்பால், இம்ரான் கான் மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து லாகூரில் உள்ள இம்ரான் கானின் வீட்டுக்கு பஞ்சாப் மாகாண போலீசார் சென்றனர்.
ஆனால் அவர்களை உள்ளே விடாமல் பிடிஐ கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிடிவாரண்ட்டுக்கு எதிராக இம்ரான் தரப்பில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இம்ரான் கானை இன்று (மார்ச் 18) வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது.
பாதுகாப்பு வாகனம் விபத்து:இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராவதற்காக இம்ரான் கான் லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது இம்ரான் கானுடன் சென்ற அவரது பாதுகாப்பு வாகனம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் இம்ரானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.