Odisha Rain: நாங்க எல்லாம் சுனாமியில் ஸ்விமிங் போடுறவங்க: கொட்டும் மழையில் மீன் பிடிக்கும் மக்கள் ஒடிசா:ஒடிசா மாநிலம் பவுத் பகுதியில் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் சாலை நடுவே கொட்டும் மழையில் நனைந்து கொண்டு மக்கள் மீன் பிடிக்கும் காட்சி வைரலாகியுள்ளது. "ரணகளத்துலேயும் ஒரு கிலுகிலுப்பு கேட்குதா" என்ற வடிவேல் காமெடி ஒடிசா மக்களுக்குத்தான் கச்சிதமாகப் பொருந்தும்.
இடைவிடாத கனமழை, வீடுகளுக்குள் வெள்ளம், மழைக்காடாக காட்சியளிக்கும் சாலைகள், இயல்பு வாழ்க்கை பாதிப்பு உள்ளிட்டப் பல பிரச்னைகளுக்கு மத்தியில், சாலையில் செல்லும் மழைநீரில் மீன்களைப் பிடித்து மகிழ்கின்றனர்.
ஒடிசாவில் பெய்து வரும் கனமழை அம்மாநிலத்தையே புரட்டிப்போட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் ஒடிசா மாநிலத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து விடாது பெய்த அடைமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:குண்டாறு தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும் வழித்தடம் மூடல்: வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு!
சாலைகள், தெருக்கள் என ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளும் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கும் சூழலில் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, "நாங்க எல்லாம் சுனாமிலேயே ஸ்விமிங் போடுறவங்க" என்ற பாணியில் மழை வெள்ளம் மூழ்கிக் கிடக்கும் சாலையில் மக்கள் மீன் பிடிக்க இறங்கி விட்டனர்.
சூழலுக்கு ஏற்றார்போல் தங்கள் மகிழ்ச்சியைத் தக்க வைக்க மக்கள் தயாராகியுள்ள நிலையில் மீன்பிடி உபகரணங்களுடன் களத்தில் இறங்கி போட்டாபோட்டி போட்டு மீன் பிடிக்கின்றனர். பவுத் பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான மீன் வளர்ப்பு குளத்தில் தண்ணீர் நிரம்பி வழியும் நிலையில் அந்த தண்ணீரில் இருந்து வெளியே வரும் மீன்கள் அருகே உள்ள சாலையில் வழிந்தோடும் நீரில் நீந்திச் செல்கின்றனர்.
இந்தச் சாலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பலர் கூட்டம் கூட்டமாக வந்து மீன்களைப் பிடித்துச் செல்கின்றனர். இது குறித்துப் பேசியுள்ள மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி லிப்சா பட்நாயக், மழை வெள்ளத்தில் ஏராளமான மீன்கள் அடித்துச்செல்லப்பட்டதாகவும், இதனால் சுமார் 9 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க:சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு: 3வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்.. தீர்வு கிடைக்குமா?