டெல்லி: இந்தியா தலைமை தாங்கி நடத்திய ஜி20 மாநாடு, இன்று (செப் 10) டெல்லியில் உள்ள பிரகதி மைதனாத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்வில் அடுத்த ஜி20 மாநாட்டினை தலைமை ஏற்கும் பொறுப்பை சுழற்சி முறையில் ஏற்று உள்ள பிரேசில் நாட்டிடம், ஜி20 தலைமையை பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் ஒப்படைத்தார்.
முன்னதாக, இன்று காலை பிரேசில் அதிபர் உள்பட பல உலகத் தலைவர்கள் ராஜ்காட்டில் வைத்து காந்திக்கு மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், அடுத்த ஜி20 மாநாட்டின் தலைமையை ஏற்ற பிரேசில் அதிபர் லூலா டா சில்வா கூறுகையில், “சமூக உள்ளடக்கம் மற்றும் பசிக்கு எதிரான போராட்டம் உள்பட, ஆற்றல் மாற்றம், நிலையான வளர்ச்சி மற்றும் உலகளாவிய நிர்வாக நிறுவனங்கள் ஆகியவை நமது முதல் முன்னுரிமைகள்.
இந்த அனைத்து முன்னுரிமைகளும் பிரேசில் தலைமை தாங்கும் ஜி20 மாநாட்டின் இலக்குகள். இது ஒரு நிலையான உலகத்தை கட்டமைக்கும். பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணி மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான உலகமயமாதல் என்ற இரு பணிக்குழுக்கள் உருவாக்கப்படும். 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் பசியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நாம் இரண்டு மடங்கு உழைப்பை அளிக்க வேண்டும்.
இல்லையென்றால், கடந்த காலங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்விகளைச் சந்திக்க நேரிடும். காலநிலை மாற்றத்துக்கு எதிராக போராடும் அரசியல் கட்சிகள் மற்றும் அதன் ஆட்சியாளர்கள், வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.