தமிழ்நாட்டில் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு, சாத்தான் குளம் தந்தை - மகன் கொலை வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளும் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. இந்த இரண்டு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள், தங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை தமிழ்நாட்டுக்கு வெளியே மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
இதில் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் இன்று (ஆக.18) மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு
தேர்தல் பரப்புரையின்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தனக்கு, தமிழ்நாட்டின் அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்பி ஒருவர் புகாரளித்தார்.
இதனையடுத்து புகார் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர் அடங்கிய விசாகா கமிட்டியை தமிழ்நாடு அரசு அமைத்தது.
அதோடு மட்டுமல்லாமல் சிறப்பு டிஜிபியை கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, 400 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை கடந்த ஜுலை 29ஆம் தேதி சிபிசிஐடி தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணையை அடுத்த ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்திருந்தார். வழக்கு விசாரணை தற்போது விழுப்புரம் நீதிமன்றத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு
இதேபோல், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரும் 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் காவல் துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தனர்.
இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தொடரப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், காவலர்கள் செல்லதுரை, வெயிலு முத்து, தாமஸ் பிரான்சிஸ், சமயதுரை உள்ளிட்ட ஒன்பது பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ள காவலர்கள்
இவ்விரு வழக்குகளிலும் விசாரணை முடிவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வழக்குகளை தமிழ்நாட்டிற்கு வெளியே மாற்றக் கோரி சிறப்பு டிஜிபியும், சாத்தான் குளம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சார்பு ஆய்வாளர் ரகு கணேஷும் உச்ச நீதிமன்றத்தை முன்னதாக நாடினர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீடு
வழக்கு விசாரணையைத் தவிர, இந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் அடிக்கடி தலையிடுவதாகவும், ஒரு பக்க சார்பாக செயல்படுவதாகவும், ”குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர்” எனும் அனுமானத்திற்கு எதிராக இச்செயல் உள்ளதாகவும் தங்கள் மனுவில் இருவரும் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையை ஆந்திராவின் நெல்லூர் அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்றுமாறு சிறப்பு டிஜிபி கோரியுள்ளார். அதே நேரத்தில் ரகு கணேஷ் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வழக்கை மாற்றுமாறு கோரியுள்ளார்.
தமிழ்நாட்டின் இரண்டு பரபரப்பான வழக்குகள்
கடந்த பிப்ரவரி மாதம், 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இந்த இரண்டு சம்பவங்களும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கின் விசாரணையையும் நீதிமன்றம் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு இந்த வழக்குகளின் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதங்கள்
இந்நிலையில், “வழக்கு விசாரணை முடிவடைந்து, கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்பும், உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தொடர்ந்து கண்காணித்து வருவது, சுசீலா தேவி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முரணானது. இது போன்ற உயர் நீதிமன்றத்தின் தொடர் தலையீடுகள் இந்த வழக்கில் வேறு மாதிரியான சமூகப் பார்வையை ஏற்படுத்தி ஒரு வகையில் தண்டனையாகவும் மாறியுள்ளது” என தனது மனுவில் சிறப்பு டிஜிபி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரகு கணேஷ்,உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தானும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்களும் சிறையில் உடல்ரீதியான தாக்குதல்களுக்கு ஆளானதாகவும், இவ்வழக்கு மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகியுள்ளதாகவும், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கின் விசாரணை நேர்மையான முறையில் நடைபெறுவதாக தான் எண்ணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்ட இரண்டு வழக்குகள்
தமிழ்நாட்டிலிருந்து இதே போன்ற கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களின் மூலம் முன்னதாக திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான தா. கிருட்டிணன் கொலை வழக்கும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கும் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன.
தா. கிருட்டிணன் கொலை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு ஆந்திராவில் உள்ள சித்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு மாற்றப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு, அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
வழக்குகளை தாமதப்படுத்தும் நோக்கமா?
தமிழ்நாட்டில் மிகுந்த கவனத்தைப் பெற்ற வழக்குகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றக் கோரி அடுத்தடுத்து இதேபோல் கோரிக்கைகள் வைக்கப்படும் நிலையில், இதுகுறித்துப் பேசிய மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், “வழக்குகளை தாமதப்படுத்த, நமது நீதி அமைப்பில் இடம் பெற்றிருக்கும் தவிர்க்க முடியாத யுக்தி இது. சட்டத்தில் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி காலதாமதப்படுத்தும் நடவடிக்கை இது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:293ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டேன் - நித்தியானந்தா அறிவிப்பு