புதுச்சேரிக்கு தேர்தல் முடிவுகள் வந்து ஒரு மாதம் முடிவு அடைய இருக்கும் நிலையில், புதுச்சேரியில் அமைச்சர்கள் யாரும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. இதற்கு மத்திய பாஜக அரசு, என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கும் கடும் நெருக்கடியே காரணம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை என்.ஆர். காங்கிரஸ் கட்சியும், ஆறு இடங்களை பாஜகவும் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.இந்நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி கரோனா காரணமாக மருத்துவமனையில் இருந்தபோது, அவசர அவசரமாக மூன்று நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களை மத்திய பாஜக அரசு நியமித்தது.
இதன்மூலம் புதுச்சேரி பாஜக தனது பலத்தை ஒன்பதாக உயர்த்திக்கொண்டது. இது ரங்கசாமிக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் மூன்று சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பாஜக தன் பக்கம் வளைத்துப் போட்டுக்கொண்டுள்ளது. இதன்மூலம் தனது பலத்தை பாஜக 12ஆக மாற்றிக்கொண்டது. இது பிரதான கூட்டணிக் கட்சியான என்.ஆர். காங்கிரசை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த நடவடிக்கைகள் காரணமாகவே தேர்தல் முடிவுகள் வந்து ஒரு மாதம் முடியும் நிலையிலும் அமைச்சர்கள் யாரும் இதுவரை பதவி ஏற்க முடியவில்லை.துணை முதலமைச்சர் பதவி, இரண்டு அமைச்சர் பதவி, சபாநாயகர் பதவி ஆகியவை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜக தொடர்ந்து அடம்பிடிப்பதும், துணை முதலமைச்சர் பதவி என்று ஒன்று புதுச்சேரியில் இல்லவே இல்லை எனவும், ஆகவே இரண்டு அமைச்சர்கள், துணை சபாநாயகர் ஆகிய பதவிகள் மட்டுமே பாஜகவுக்கு தர முடியும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி உறுதியாக இருந்துள்ளார்.
இதனிடையே சபாநாயகர் பதவி, அமைச்சர் பதவியை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக என்.ஆர். காங்கிரஸ் - பாஜக இடையே பேச்சுவார்த்தை நடந்தது.