ஹைதராபாத்:இந்தியாவில் தொடர்மழை பெய்து வருவதாலும், விளைச்சல் குறைந்து, வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு வருவதாலும் சமீபமாக காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக, தக்காளியின் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. தினமும் தங்க விலைபோல ஏற்றம் இறக்கம் காட்டிக் கொண்டுள்ளது.
மக்கள் தங்கம் வாங்க போவதற்கு முன் விலையை பார்ப்பது போன்று, தற்போது தக்காளியின் விலையை விசாரித்த பின்னரே வாங்கச் செல்லும் நிலை வந்துவிட்டது. எதற்காக தக்காளிக்கு இவ்வளவு தட்டுப்பாடு? காரணம், நாம் சமைக்கும் அனைத்து சமையலுக்கும் தக்காளி மற்றும் வெங்காயம் என்பது அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் ஒரு வகையான காய்கறியாகும். அதற்காகத்தான் தக்காளியை ‘சமையலறையின் ராணி’ என்று அழைக்கின்றனர்.
'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்று கூறுவார்கள். ஆனால், தற்போது உப்பில்லாமல் கூட சமைத்து சாப்பிட்டு விடலாம். ஆனால், தக்காளி இல்லாமல் சமைக்கவே முடியாது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் எப்போதுமே மழைக் காலங்களில் தக்காளியின் விலை சற்று உயரத்தான் செய்யும். ஆனால், இந்த அளவிற்கு எப்போதும் உச்சம் தொட்டது இல்லை என தக்காளி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், தக்காளி ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது தக்காளியை திருமணம் போன்ற நிகழ்வுகளில் பரிசாக வழங்குவது, விழிப்புணர்வு ஏற்படுத்த செல்போன், ஹெல்மெட் பொன்றவை வாங்கினால் தக்காளி இலவசம் என்று அறிவிப்பு வெளியிடுவது, வெளிநாட்டில் இருந்து ஷூட்கேஸில் தாக்காளி வாங்கி வருவது. இதெல்லாம் தவிர தக்காளியை திட்டமிட்டு கொள்ளையடிப்பது என சமூக வலைதளங்களில் தக்காளி குறித்த செய்திகள் வலம் வந்த வண்ணமே உள்ளது.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் அன்னமியா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளியில் நாளுக்கு நாள் பதிவாகும் தக்காளியின் விலை மக்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மதனப்பள்ளி காய்கறி சந்தையில் உயர்ரக தக்காளியின் விலை 1 கிலோ ரூ.168க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, 30 கிலோ எடையுள்ள ஒரு தக்காளி பெட்டியை விற்பனை செய்தால் ஒரு கிராம் தங்கமே வாங்கிவிடலாம்.
இதேபோல், இரண்டாம் ரக தக்காளியின் விலையும் 1 கிலோ ஆப்பிள் பழத்தின் விலையும் ஒன்றுதான் என விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், விளைச்சல் குறைந்துள்ள காரணத்தால் மதனப்பள்ளி சந்தைக்கு நேற்று 361 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.