புதுச்சேரி: ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குதல், ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிடுதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர், நேற்று (ஜன.9) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, சி.பி.எம், பி.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் என ஏராளமானவர்கள், பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சில பகுதிகளில் இரு தரப்பு ஊழியர்கள் மத்தியில் வாக்குவாதமும், சில பகுதிகளில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தின் முதல் நாளான நேற்று (ஜன.9), மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுவது குறைவாக இருந்தது. அதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபடாத சங்கத்தைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதையும் படிங்க:சென்னிமலை பணிமனையை முற்றுகையிட்டு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!
இதனிடையே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலம் புதுச்சேரி கிளையிலும், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து 2வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில், புதுச்சேரி பகுதியில் உள்ள 2 பணிமனைகளில் இருந்து நேற்று (ஜன.9) 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இன்று (ஜன.10) 75 சதவீதத்திற்கு மேலான பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகின்றன.
மேலும், புதுச்சேரி சுப்பையா சாலையில் உள்ள பணிமனையின் முன் தொழிற்சங்கத்தினர் கூடி, ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடக்கூடிய தொழிற்சங்கத்தினர், அவ்வப்போது பேருந்துகளை மறிப்பதாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனை அடுத்து, ஒதியன்சாலை காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பேருந்தை இயக்க தடை செய்ய மாட்டோம் என்றும், தற்காலிக ஊழியர்களைத்தான் தடுப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பேருந்தை மறித்து, இடையூறு செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:அமைச்சர் கண் முன்னே ஆற்றில் அடித்து வரப்பட்ட பசு மாடு உயிருடன் மீட்பு!