ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஜனவரி 13ஆம் தேதி ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் தொடங்கின. ஜனவரி 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மொத்தம் 4 பிரிவுகளாக அணிகள் மோதுகின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் உள்ளன. பி பிரிவில் பெல்ஜியம், ஜப்பான், கொரியா, ஜெர்மனி அணிகள் உள்ளன.
அதேபோல சி பிரிவில் நெதர்லாந்து, சிலி, மலேசியா, நியூசிலாந்து அணிகளும், டி பிரிவில் இந்தியா, வேல்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து அணிகளும் உள்ளன. ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து, இந்தியா, இங்கிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளன.
இந்த போட்டிகளை காண முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் புவனேஷ்வருக்கு சென்றுவருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (ஜனவரி 19) புவனேஷ்வர் சென்றார். அதோடு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து அன்பளிப்பை வழங்கினார்.