சென்னை: தெலங்கானாவில் கடந்த நவ.30 அன்று சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, டிச.3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதன்படி, 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில், 64 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கிறது.
மேலும், தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து ஆட்சியில் இருந்த சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி 38 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனையடுத்து, பாஜக 8 இடங்களையும், ஏஐஎம்எம் 7 இடங்களையும் பிடித்தது. இதனையடுத்து, தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக, அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் (டிச.6) டெல்லி சென்ற ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து, டெல்லியில் இருந்து புறப்பட்ட ரேவந்த் ரெட்டி, நேற்று மாலை ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, அவரை கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த நிலையில், இன்று (டிச.7) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக் கொண்டார்.
முன்னதாக, முதலமைச்சராக பதவியேற்க இருந்த ரேவந்த் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள X பதிவில், “எங்கள் தொலைபேசி உரையாடலின்போது, என் மனமார்ந்த வாழ்த்துக்களை ரேவந்த் ரெட்டிக்கு தெரிவித்தேன். தெலங்கானா முதலமைச்சராக அவர் பதவியேற்க தயாராகி வருகிறார். அவரது பதவிக்காலம் வெற்றிகரமான மற்றும் தாக்கத்துடன் கூடியதாக அமைய வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.
மேலும், இன்றைய பதவியேற்பின்போது, மல்லு பாட்டி விகரமர்கா, உத்தம் குமார் ரெட்டி, கோமாடி ரெட்டி, வெங்கட் ரெட்டி, சீதக்கா, கொண்டா சுரேகா, ஸ்ரீதர் பாபு, பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, தும்மலா நாகேஸ்வர ராவ், தாமோதர ராஜ நரசிம்மா, சுதர்சன் ரெட்டி மற்றும் பொன்னம் பிரபாகர் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர்.
இதையும் படிங்க:ராஜஸ்தான் முதலமைச்சர் யார்? டெல்லி விரையும் வசுந்தரா ராஜே!