டெல்லி :கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, மக்களவையில் கேள்வி எழுப்பிய கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு லஞ்சம் வாங்கியதாகவும், அதில் அதானி விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஹிராநந்தனி குழுமத்திடம் பணம் வாங்கியதாகவும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடிதம் எழுதி இருந்தார். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கோரி சிபிஐக்கு வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ராய் புகார் அளித்து இருந்தார்.
ஹிராநந்தினி குழுமத்தின் தலைவர் தர்சன் ஹிராந்ந்தினி - மஹுவா மொய்த்ரா இடையே பணப் பரிவர்த்தனை நடந்தது ஆதாரங்கள் இருப்பதாக வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பட்சத்தில் தனக்கு வழங்கப்பட்ட அரசு வசதிகளை மஹுவா மொய்த்ரா சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே அளித்த புகார் கடிதத்தை மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பிய சபாநாயகர் ஓம் பிர்லா, அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, எம்.பி. மஹுவா மொய்த்ரா, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பிய ஒழுங்கு நடவடிக்கை குழு, இது குறித்து விசாரணை நடத்தியது.
விசாரணையின் முடிவில் மஹுவா மொய்த்ராவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஒழுங்கு நடவடிக்கை குழு மக்களவைக்கு பரிந்துரைத்தது. இந்த நிலையில் இன்று (டிச. 8) மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியபோது நெறிமுறைக் குழுவின் தலைவர் வினோத் குமார் சோன்கர், மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் தொடர்பான பரிந்துரை அறிக்கையை அவையில் தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் அமைச்சர் பிரகலாத் ஜோஷி தீர்மானம் தாக்கல் செய்தார். தொடர்ந்து தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இறுதியில் எம்.பி. மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க :ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!