அசன்சோல்:நான்கு கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் அந்த கட்சியே காணாமல் போய்விடும் என்று அசன்சோல் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
மேற்குவங்க மாநிலத்தில், 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இன்று (ஏப்.17) ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 45 தொகுதிகளுக்கு நடைபெறகிறது.
இதற்கிடையே மேற்கு பர்தாமன் மாவட்டத்திலுள்ள தொழில் நகரமான அசன்சோல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருக்கு பிணத்தை வைத்து அரசியல் செய்யும் பழைய பழக்கம் உள்ளது. ஏப்ரல் 10ஆம் தேதி கூச் பெகர் மாவட்டத்திலுள்ள சிடல்குன்சி நகரில், எதிர்பாராமல் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்.
நான்கு கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முழுவதுமாக முடிந்த பின்னர் மம்தாவையும், அவரது மருமகனையும் மொத்தமாக மக்கள் தோற்கடித்து விடுவார்கள்.